ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்: சிறுபான்மையினருக்கு ரூ.30 லட்சம் வரை கடன் – தமிழக அரசு அறிவிப்பு!
30 lakhs Loan For Ration Card Holders TN Govt Announced
30 lakhs Loan For Ration Card Holders TN Govt Announced : நீலகிரி: தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் (லோன் மேளா) அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தகுதியுள்ள நபர்களுக்கு ரூ.30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிசம்பர் 23, 24, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடலூர், செவிடிபேட்டை, உதகை மற்றும் குன்னூர் கிளைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.
திட்ட விவரங்கள் மற்றும் கடன் வரம்பு:
பயனாளிகளின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்து இரண்டு திட்டங்களின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன:
திட்டம் 1: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்களுக்கு, தனிநபர் கடனாக 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
திட்டம் 2: ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருப்பவர்களுக்கு, ஆண்களுக்கு 8% மற்றும் பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கல்வி மற்றும் கைவினைஞர்களுக்கான சலுகைகள்:
கல்விக்கடன்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் (3% வட்டி) வரையிலும், திட்டம் 2-ன் கீழ் ரூ.30 லட்சம் (மாணவர்களுக்கு 8%, மாணவிகளுக்கு 5% வட்டி) வரையிலும் கல்விக்கடன் கிடைக்கும்.
கைவினைஞர்களுக்கான விராசாத் கடன்: கைவினைத் தொழில் செய்பவர்களுக்கு மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க ஆண்களுக்கு 5% மற்றும் பெண்களுக்கு 4% வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழுக்கள்: குழுவில் உள்ள ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
சிறுபான்மையினர் மதச்சான்றிதழ் & சாதிச்சான்றிதழ்.
வருமானச் சான்றிதழ்.
ரேஷன் கார்டு (Smart Card) அல்லது இருப்பிடச் சான்று.
ஆதார் கார்டு நகல்.
தொழில் குறித்த திட்ட அறிக்கை (தனிநபர் கடனுக்கு).
கல்விக்கடனாக இருந்தால்: உண்மைச் சான்றிதழ் (Bonafide), கட்டண ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ்.
விண்ணப்பிக்கும் முறை:
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சமண மதத்தைச் சேர்ந்த தகுதியுள்ள நபர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.