TRB Assistant Professor Recruitment 2026
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,292 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: 6 மாதத்தில் தேர்வு முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை
TRB Assistant Professor Recruitment 2026 தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தவர்கள், தங்களை பணி வரன்முறை செய்து உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு தமிழக அரசு 1,146 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் சிறப்பு தேர்வு நடத்தி உதவி பேராசிரியர்களாக நியமிக்க அரசாணை வெளியிட்டது.
ஆனால், பின்னர் 2022ஆம் ஆண்டு அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு புதிய தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு எதிராக கவுரவ விரிவுரையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, 2020ஆம் ஆண்டு அரசாணையின் அடிப்படையில் தேர்வு நடைமுறைகளை முடிக்க உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உயர்கல்வித் துறை, கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை வழங்கியது.

அதன்படி:
- அரசு கல்லூரிகளில் உள்ள 1,146 உதவி பேராசிரியர் பணியிடங்கள்
- பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரிகளுக்கான 146 பணியிடங்கள்
என மொத்தம் 1,292 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 42,064 பேர் விண்ணப்பித்துள்ளதால், வெளிப்படையான போட்டித் தேர்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், நீண்டகாலமாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு:
- அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ்
- வயது வரம்பில் தளர்வு
வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மற்றும் நியமன நடைமுறைகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை தற்போது பணியாற்றி வரும் கவுரவ உதவி பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
